Table of Contents
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
ஒழுங்குமுறை சட்டம் – 1773
முன்னுரை:
ஆங்கிலப் பாராளுமன்றம் கி.பி 1773 இல் ஒழுங்கு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது இந்தச் சட்டமானது இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்கு முதல் படியாக அமைந்தது
பின்னணி:
- கி.பி. 1772இல் வங்காள கவர்னராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார். பிறகு வங்காளத்தின் தலைமை ஆளுநரானார்.
- இவர் ஆட்சியின் போது கி.பி.1772 இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினால் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளானார்கள்.
- இரட்டை ஆட்சிமுறை வங்காளத்தில் பொருளாதார நிலையைச் சீர்குலையச் செய்தது.
- விவசாயிகளும், கலைஞர்களும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆங்கிலக் கிழக்கு இந்தியக் கம்பெனி அதிகாரிகள் தங்களுடைய உரிமையைத் தவறாகப் பயன்படுத்தி நிறைய சொத்து சேர்த்துக் கொண்டனர்.
- கம்பெனியின் நிர்வாகம் சீர்குலைந்தது. இந்நிலையில் கம்பெனி ஆங்கில அரசிடம் பெரும் தொகையைக் கடனாகக் கேட்டது.
- இச்சமயத்தில், ஆங்கில அரசு, கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் நேரிடையாகத் தலையிட வேண்டியதாயிற்று.
ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகள்:
ஒழுங்குமுறை சட்டம் வணிக குழுவின் அரசை இந்தியாவிலும், தாய்நாட்டிலும் மாற்றியமைத்தது அதில் இடம்பெற்றிருந்த முக்கிய விதிமுறைகள்
- இயக்குநர்கள் குழுவிலுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுவர். ஓய்வு பெற்றவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்தவர்களாவர்.
- வங்காள ஆளுநர் இனி வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என அழைக்கப்படுவார். அவரது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும்.
- தலைமை ஆளுநருக்கு உதவியாக நான்கு பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்பட்டது. பெரும்பான்மை முடிவுப்படியே அரசு செயல்படவேண்டும். தலைமை ஆளுநருக்கு முடிவுசெய்யும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
- தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக்குழுவிற்கு போர், அமைதி, உடன்பாடு போன்ற விவகாரங்களில் மற்ற மாகாணங்களை கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
- கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் ஏற்படுத்த இச்சட்டம் வகை செய்தது. இதில் ஒரு தலைமை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளும் இருப்பர். இது, தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக் குழுவிற்கு அப்பாற்பட்டு தனித்து இயங்கும். 1774 ஆம் ஆண்டு அரசு பட்டய சட்டத்தின் படி உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.
- தலைமை ஆளுநர், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட வணிகக்குழுவின் பணியாளர்கள் எவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரிசுப் பொருட்கள், நிதி வெகுமதிகள் போன்றவற்றை பெறுவதற்கு இச்சட்டம் தடைவிதித்தது.
சட்டத்தின் நிறைகள்:
- வணிகக் குழுவின் அலுவல்களை நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமையே ஒழுங்குமுறை சட்டத்தின் முக்கியத்துவமாகும்.
- மேலும், இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இச்சட்டம் வெளிப்படுத்தியது.
- வணிகக் குழுவின் தன்னிச்சையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தமையே இச்சட்டத்தின் மிகப்பெரிய நிறையாகும். இந்தியாவின் எதிர்கால நிர்வாகத்திற்கும் சட்டங்களுக்கும் ஒரு வரைச்சட்டமாக இது விளங்கியது.;
சட்டத்தின் குறைகள்:
- உச்சநீதிமன்றம், தலைமை ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழு உறுப்பினர்களது அதிகார எல்லை இச்சட்டத்தால் வரைமுறை செய்யப்படவில்லை.
- தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடையே அடிக்கடி பூசல் ஏற்பட்டது.
- சென்னை, மும்பை ஆளுநர்கள், வங்காளத் தலைமை ஆளுநரது ஆணைகளுக்குக் கட்டுப்படவில்லை. இந்தச் சட்டம் தலைமை ஆளுநரது நிலையை மோசமடையச் செய்தது.
- இந்தச் சட்டத்தின் குறைகளைப் போக்குவதற்காகக் கி.பி. 1784 ஆம் ஆண்டு, ஆங்கிலப் பிரதமர் இளைய பிட் என்பவர் பிட் இந்தியச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |