Tamil govt jobs   »   Study Materials   »   Slave Dynasty for TNPSC

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்

அடிமை வம்சம் 1206 முதல் 1290 வரை தில்லி சுல்தானகத்தை ஆண்ட ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஐந்து வம்சங்களுள் முதலாவது ஆகும்.
அடிமை வம்சம், மம்லூக் வம்சம் அல்லது குலாம் வம்சம் என்றும் அழைக்கப்பெற்றது. அடிமை வம்சம் மத்திய ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட துருக்கத் தளபதியான குதுப்புத்தீன் ஐபக் என்பவரால் இந்தியாவில் நிறுவப்பட்டது. Slave Dynasty ஐ சேர்ந்த ஆட்சியாளர்கள் பலர், முன்னர் கோரி அரச மரபில், அடிமைகளாக இருந்ததால், இந்த வம்சம் தில்லி அடிமை வம்சம் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

Fill the Form and Get All The Latest Job Alerts

Slave Dynasty History | அடிமை வம்சம் வரலாறு

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_30.1
Slave Dynasty History
 • மம்லூக் என்பது சொந்தமானது என்று பொருள் ஆகும். அடிமை வம்சாவளியைச் சேர்ந்த இராணுவ வீரர், ஒருவர் இசுலாமிற்கு மாறினார். இந்த நிகழ்வு 9 ஆம் நூற்றாண்டில் தொடங்கி மேலும் படிப்படியாக பல்வேறு முசுலீம் சமூகங்களில் மம்லூக் ஒரு சக்திவாய்ந்த இராணுவ சக்தியாக மாறியது. மம்லூக், தங்களது அரசியல் மற்றும் இராணுவ அதிகாரத்தை எகிப்தில் மட்டுமல்லாமல், லெவண்ட், ஈராக் மற்றும் இந்தியாவிலும் கொண்டிருந்தனர்.
 • கோரி பேரரசின் சுல்தானான முகம்மது கோரி, 1206 இல் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது பேரரசு அவரது முன்னாள் மம்லூக் தலைவர்கள் தலைமையிலான சிறு அரசுகளாக பிரிந்தது. தாஜ்-உத்-தின் எல்துஸ் கசினியின் ஆட்சியாளராகவும், முகம்மது பின் பக்தியார் கில்ஜிக்கு வங்காளமும், நசீர்-உத்-தின் கபாச்சா முல்தானின் சுல்தானாகவும் ஆனார்கள். குதுப் உத்-தின் ஐபக் டெல்லியின் சுல்தானானார், அதுவே அடிமை வம்சத்தின் தொடக்கமாகும்.
 • கோரியின் ஒரு மேலதிகாரி படுகொலை செய்யப்பட்டபோது, ஐபக் அதிகாரத்திற்கு வந்தார். இருப்பினும், டெல்லி சுல்தானாக அவரது ஆட்சி குறுகிய காலமே நீடித்தது. 1210 இல் ஐபக் இறந்ததால் அவரது மகன் அராம் ஷா அரியணை ஏறினார், இவரும் 1211 இல் இல்துதுமிசுவால் படுகொலை செய்யப்பட்டார்.

Also Read : டெல்லி சுல்தானியம் | The Delhi Sultanate For TNPSC | RRB NTPC

Important rulers of the Slave Dynasty | அடிமை வம்சத்தின் முக்கிய ஆட்சியாளர்கள்

Qutb al-Din Aibak | குத்புதீன் ஐபக் (1206 – 1211)

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_40.1
Qutb al-Din Aibak
 • கோரி முகமதுவிடம் அடிமையாக இருந்தவர் குத்புதீன் ஐபக். கோரி முகமது அவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுநராக நியமித்தார்.
 • டெல்லிக்கு அருகிலுள்ள இந்திரபிரஸ்தம் என்ற இடத்தில் ஐபக் தனது ராணுவ நிலையத்தை அமைத்துக் கொண்டார். கோரியின் வாழ்நாளிலேயே ஐபக் ஒரு நிலையான படையைத் திரட்டியதோடு வட இந்தியாவில் தமது ஆதிக்கத்தையும் நிலைப்படுத்திக் கொண்டார்.
 • 1206 ஆம் ஆண்டு கோரி இறந்தவுடன் ஐபக் தனது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டார். கோரி அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். இவ்வாறு, அடிமை வம்சத்திற்கும் டெல்லி சுல்தானகத்திற்கும் ஐபக் அடிக்கல் நாட்டினார்.
 • சுல்தான் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட அவர் லாகூரை தலைநகராக்கினார். அவரது ஆட்சி நான்கு ஆண்டுகளே நீடித்தது.
 • எழுத்தாளர்களுக்கு தாராளமாக கொடைகளை வழங்கியதால், முஸ்லிம் எழுத்தாளர்கள் ஐபக்கை ‘லாக் பக்ஷ்’ என அழைத்தனர். ஹசன் நிசாமி என்ற சிறந்த அறிஞரை ஐபக் ஆதரித்தார்.
 • சூஃபித் துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் என்பவரின் பெயரில் அவர் குதுப்மினாரை கட்டத் தொடங்கினார். பின்னர் அது இல்துத்மிஷ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
 • 1210 ஆம் ஆண்டு போலோ விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது ஐபக் தவறி விழுந்து இறந்தார்.
 • அடுத்து அவரது மகன் ஆரம் பக்ஷ் ஆட்சிப் பொறுப்பேற்றார். எட்டு மாதங்களுக்குப் பிறகு இல்துத்மிஷ் அவரை அகற்றிவிட்டு டெல்லி சுல்தானாகப் பதவியேற்றார்.

Iltutmish | இல்துத்மிஷ் (1211 – 1236)

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_50.1
Iltutmish
 • இல்பாரி குலத்தைச் சேர்ந்தவர் இல்துத்மிஷ். எனவே அவரது அரசு குலம் இல்பாரி குலம் என்று அறியப்பட்டது.
 • அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களால் ஐபக்கிடம் அடிமையாக விற்கப்பட்டவர் இல்துத்மிஷ். ஐபக் தமது மகளை அவருக்கு திருமணம் செய்துவைத்து மருமகனாக்கிக் கொண்டார். பின்னர், அவரை குவாலியரின் இக்தாதார் பதவியிலும் அமர்த்தினார்.
 • 1211ல் இல்துத்மிஷ் ஆரம் பக்ஷை விரட்டிவிட்டு சுல்தானாக பதவியேற்றார். லாகூரிலிருந்த தலைநகரை அவர் டெல்லிக்கு மாற்றினார்.
 • அவரது ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகள் தமது அரியணையை போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதிலேயே கழிந்தது, இதற்கிடையில் மங்கோலியர்களின் தலைவனான செங்கிஸ்கான் என்று அனைவராலும் அழைக்கப்படும் தெமுஜின் மத்திய ஆசியாமீது படையெடுப்பைத் தொடங்கியிருந்தார். அங்கு குவாரிசம் ஆட்சியாளரான ஜலாலுதீன் மங்கபர்னி என்பவரை முறியடித்தார். சிந்து நதியைக் கடந்து இந்தியாவிற்குள் ஓடிவந்த மங்கபர்னி இல்துத்மிஷிடம் புகலிடம் கேட்டார். மங்கோலியரிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக மங்கபர்னிக்கு புகலிடம் கொடுக்க இல்துத்மிஷ் மறுத்தார்.
 • செங்கிஸ்கானும் இந்தியாவிற்குள் படையெடுத்து வராமல் திரும்பிச் சென்றார். இல்துத்மிஷ் பின்பற்றிய திறமையான மங்கோலியக் கொள்கையால், இந்தியா செங்கிஸ்கானின் படையெடுப்பிலிருந்து தப்பியது.
 • வங்காளம் மற்றும் பீகார் மீது படையெடுத்த இல்துத்மிஷ், அங்கு தமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டார். சிந்து, முல்தான் பகுதிகளையும் டெல்லி சுல்தானியத்துடன் இணைத்தார். ராஜபுத்திரர்களின் கிளர்ச்சிகளை ஒடுக்கிய அவர் ராந்தம்பூர், ஜாலோர், ஆஜ்மீர், குவாலியர் போன்ற அரசுகளை மீண்டும் கைப்பற்றினார்.
 • 1229 ஆம் ஆண்டில், காலிப் இடமிருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற்று இந்தியாவின் சட்ட முறையான ஆட்சியாளரானார். தமது வாரிசாக ரசியா என்ற தனது மகளை அவர் நியமித்தார். டெல்லி சுல்தானகத்திற்கு பரம்பரை வாரிசு முறையை இவ்வாறு இல்துத்மிஷ் தொடங்கி வைத்தார்.
 • அவரது ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவுக்கு வந்த அறிஞர்களையும், சூஃபி துறவிகளையும் இல்துத்மிஷ் ஆதரித்தார். மின்ஹஜ்-உஸ்-சிராஜ், தாஜூதின், நிசாம் உல் முல்க் முகமது ஜெய்னதி, மாலிக் குத்புதீன் ஹசன், பக்ருல் முல்க் ஈசாமி போன்றோர் அவரது காலத்தில் வாழ்ந்து, அவரது அவையை அலங்கரித்த அறிஞர்கள் ஆவார்கள்.
 • இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடமான (238 அடி) குதுப்மினாரை கட்டிமுடித்த அவர் ஆஜ்மீரில் அழகிய மசூதி ஒன்றையும் கட்டினார். இந்தியாவில் அராபிய நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் இல்துத்மிஷ். 175 கிராம் எடைகொண்ட வெள்ளி தாங்கா என்ற அவரது நாணயம் இடைக்கால இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டது. வலிமை வாய்ந்த நாற்பது படைத் தலைவர்கள் கொண்ட நாற்பதின்மர் குழு என்பதையும் இல்துத்மிஷ் உருவாக்கினார்.

Also Read : Best Study Materials For TNPSC | TNPSC க்கான சிறந்த பாட புத்தகங்கள்

Razia Sultana | ரசியா (1236 – 1240)

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_60.1
Razia Sultana
 • இல்துத்மிஷ் தனது மகளான ரசியாவை அரியணைக்கு வாரிசாக நியமித்திருந்தார். ஆனால் டெல்லியின் காஸி மற்றும் வாசிர் இருவரும் ருக்னுதீன் பிரோஸ் என்பவரை அரியணையில் அமர்த்தினர்.
 • முல்தானில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்குவதற்கு ருக்னுதீன் சென்றார். அத்தருணத்தை பயன்படுத்திக் கொண்ட ரசியா டெல்லியின் அமீர்கள் ஆதரவோடு அரியணையைக் கைப்பற்றிக் கொண்டார். அபிசீனிய அடிமையான யாகூத் என்பவரை குதிரைப் படைத் தலைவனாகவும் நியமித்தார். ஆணுடை தரித்து அரசவையில் ரசியா அமர்ந்தார். வேட்டைக்குச் செல்வது படைநடத்துவது உள்ளிட்ட செயல்களிலும் ரசியா ஈடுபட்டார்.
 • 1240 ஆம் ஆண்டு, அல்தூனியா என்ற பட்டிண்டாவின் ஆளுநர் ரசியாவுக்கெதிராக கிளர்ச்சியிலீடுபட்டார். அல்தூனியா யாகூத்தைக் கொன்று, ரசியாவை சிறைப்படுத்தினார். இதற்கிடையில் துருக்கிய உயர்குடியினர் இல்துத்மிஷின் மற்றொரு மகனான பஹ்ரம் என்பவரை அரியணையில் அமர்த்தினர்.
 • சிறையிலிருந்த ரசியா அல்தூனியாவின் அன்பைப் பெற்று அவரது துணையோடு டெல்லி நோக்கி சென்றார். ஆனால், ரசியா தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
 • ரசியாவின் வீழ்ச்சி நாற்பதின்மர் குழுவின் எழுச்சிக்கு வழிவகுத்தது. அடுத்த ஆறு ஆண்டுகள் பஹ்ரம் மற்றும் மசூத் இருவரும் டெல்லியை ஆண்டனர். 1246 இல் இல்துத்மிஷின் இளைய மகனான நசிருதீன் முகமதுவை சுல்தானாக பால்பன் நியமித்தார்.

Ghiyas ud din Balban | கியாசுதீன் பால்பன் (1246 – 1287)

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_70.1
Ghiyas ud din Balban
 • சுல்தான் நசிருதீன் முகமதுவின் அரசப்பிரதியாக செயல்பட்ட பால்பன், உலுக்கான் என்றும் அழைக்கப்பட்டார். தனது மகளை சுல்தானுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவரது வலிமையையும் பெருக்கிக் கொண்டார்.
 • ஆட்சித்துறையை பால்பன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கூட, அரசவையில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. 1266 ஆம் ஆண்டில் நசிருதீன் முகமது வாரிசு ஏதுமின்றி இறந்ததால், பால்பன் அரியணையேறினார்.
 • நாற்பதின்மர் குழுவிலிருந்த உயர்குடியினரே தமக்கு எதிரிகள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். சுல்தானின் அதிகாரத்தையும் மதிப்பையும் கூட்டுவதன் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என அவர் நம்பினார்.
 • பால்பனது கருத்துப்படி ‘அரசன் இறைவனது நிழல் போன்றவன்’, ‘இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன்’. எனவே, பால்பன் தீவிரமான அரசவை நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். சுல்தான் முன்பு மண்டியிட்டு வணங்கி, காலைத்தொட்டு முத்தமிடும் வழக்கத்தை பின்பற்றச் செய்தார். இதனால் உயர் குடியினரைவிட சுல்தான் உயர்ந்தவர் என்பது உணர்த்தப்பட்டது. தனது செல்வத்தையும் வலிமையையும் உயர்குடியினருக்கும் மக்களுக்கும் எடுத்துக்காட்டும் விதத்தில் நவ்ரோஸ் என்ற பாரசீகத் திருவிழாவையும் ஆடம்பரமாக அவர் கொண்டாடினார். துருக்கிய உயர்குடியினரின் நலனை நாடுபவராக அவர் திகழ்ந்தார்.
 • துருக்கிய உயர்குடியினர் இடம் பெற்றிருந்த நாற்பதின்மர் குழுவை ஒழிக்க அவர் முடிவுசெய்தார். தனக்குக் கீழ்ப்படிந்தவர்களை மட்டும் விட்டுவிட்டு பிறரை ஒழித்துக் கட்டினார். பால்பன் தனது அரசை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
 • திவான் இ அர்ஸ் என்ற ராணுவத் துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகத்தை சீரமைத்தார். 1279 ஆம் ஆண்டு வங்காள ஆளுநர் துக்ரில்கான் பால்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது.
 • வடமேற்கு இந்தியாவில் மங்கோலியர்கள் மீண்டும் படையெடுத்து வந்தனர். பால்பன் தனது மகன் முகமது தலைமையிலான படைகளை மங்கோலியருக்கெதிராக அனுப்பி வைத்தார். ஆனால், முகமது போரில் கொல்லப்பட்டார். இது பால்பனுக்கு துயரத்தைக் கொடுத்ததால், 1287ல் பால்பன் இறந்தார். டெல்லி சுல்தானகத்தின் எழுச்சிக்கு பால்பன் ஆற்றிய பங்கு மகத்தானது.
 • பால்பனின் மறைவுக்கு பின்னர், அவரது பேரனான கைக்குபாத் என்பவர் டெல்லி சுல்தானாக நியமிக்கப்பட்டார். அவரது நான்கு வருடகால திறமையற்ற ஆட்சிக்குப்பின், 1290 ஆம் ஆண்டு டெல்லி அரியணையை ஜலாலுதீன் கில்ஜி கைப்பற்றினார்.

Also Read : மௌரியப் பேரரசு (322-185) BCE | TNPSC குரூப்1, குரூப்2/2A

Slave Dynasty Architecture | அடிமை வம்சத்தின் கட்டிடக்கலை

Quwwat-ul-Islam Mosque | குவாத் உல் இஸ்லாம் மசூதி

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_80.1
Quwwat-ul-Islam Mosque
 • வட இந்தியாவின் முதல் மசூதி.
 • இது பழமையான கோவில் வளாகம் இருந்த இடம்.
 • மூன்று பக்கங்களிலும் தலா மூன்று நுழைவாயில்கள் உள்ளன.
 • பிரதான நுழைவாயில் கிழக்கில் உள்ளது மற்றும் அது ஒரு குவிமாடத்தை கொண்டுள்ளது.
 • தூண்கள் மற்றும் கூரைகள் அனைத்தும், இந்து மத வடிவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன.
 • 27 கோயில்களின் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது.
 • மிஹ்ராபை தவிர, மொத்த மசூதியும் இஸ்லாமியத் தன்மையைக் கொண்டதாகத் தெரியாது.

Qutab Minar | குதுப் மினார்

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_90.1
Qutab Minar
 • கி.பி 1192 இல் தாரைனில், காஃபிர்களுக்கு எதிரான முஸ்லிம் வெற்றியை நினைவுகூருவதே இதன் நோக்கமாகும்.
 • குவ்வத் உல் இஸ்லாம் மசூதிக்கு சற்று வெளியே அமைந்துள்ளது.
 • குதுப் மினார் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாம் மினாரால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது ஆரம்பகால ஆப்கானிய கட்டிடக்கலைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். இது பின்னர் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையாக உருவானது.
 • குதுப் மினார் 72.5 மீட்டர் (239 அடி) உயரத்தில் ஐந்து தனித்தனி மாடிகளைக் கொண்டுள்ளது.
 • ஒவ்வொரு மாடியும் அலங்கரிக்கப்பட்ட பெட்டகத்தை சுமந்து செல்லும் ஒரு முன்பகுதியால் குறிக்கப்பட்டுள்ளது .
 • அடிவாரத்தில் 14.3 மீட்டர் விட்டம் முதல் மேலே 2.7 மீட்டர் வரை 379 படிகள் உயரம் கொண்டுள்ளது.
 • சுற்றியுள்ள கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன் இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

Also Read : மௌரிய கலை மற்றும் கட்டிடக்கலை | TNPSC Group 1 and 2/2A

Adhai Din Ka Jhonpra | அதாய் தின் கா ஜோப்ரா

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_100.1
Adhai Din Ka Jhonpra
 • ஆதியில் ஒரு சம்ஸ்கிருத கல்லூரியாக செயல்பட்ட இந்த கட்டிடத்தை முஹமத் கோரி 1198ம் ஆண்டு ஒரு மசூதியாக மாற்றியுள்ளார்.
 • மசூதியைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள 7 விதான வளைவுகளுடன் கூடிய சுவரில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
 • ஹீரட்டைச்சேர்ந்த அபு பக்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மசூதி ஆரம்ப கால இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிக்கு உதாரணமாக திகழ்கிறது.
 • வடக்குப்பகுதியில் அமைந்துள்ள அலங்கார வளைவு இந்த மசூதியின் பிரதான வாசலாக உள்ளது.
 • மசூதியின் மையக்கூடம் அதிக எண்ணிக்கையில் அமைந்த தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. உயரத்தை அதிகப்படுத்துவதற்காக தூண்கள் ஒன்றின்மீது ஒன்று அடுக்கி நிறுத்தப்பட்டுள்ளன. தூண்கள் அடிப்பகுதியில் பருமனாகவும் மேலே செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sultan Ghari Tomb | சுல்தான் கரி கல்லறை

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_110.1
Sultan Ghari Tomb
 • இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கல்லறை.
 • தெற்கு டெல்லியில் உள்ள மல்காபூர் கிராமத்தில், ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது.
 • இது வங்காளத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு இறந்த இல்துத்மிஷின் மூத்த மகன் நசீர் உத் தின் மஹ்மூத்தின் கல்லறை.
 • இல்துமிஷ் இந்த கல்லறையை கி.பி 1231 இல் கட்டினார்.
 • இளவரசர் நசீரின் கல்லறை ஒரு தட்டையான கூரையுடன் கூடிய எண்கோண வடிவ நிலத்தடி அறையில் மையத்தில் உள்ளது.
 • வெளிப்புற சுற்றுச்சுவர் நான்கு கோட்டைகளைக் கொண்டுள்ளது, இது ராஜ தோற்றத்தை அளிக்கிறது.

Also Read : Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை | Unit.9 Study Material for TNPSC Group 2-Part 2

Sultan Iltutmish’s Tomb | சுல்தான் இல்துத்மிஷின் கல்லறை

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_120.1
Sultan Iltutmish’s Tomb
 • குதுப் மினார் வளாகத்தின் உள்ளே, குவத் உல் இஸ்லாம் மசூதியின் வடமேற்குப் பக்கமாக ஒரு சிறிய அறையில் அமைந்துள்ளது.
 • இது வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் வளைந்த நுழைவாயிலைக் கொண்டுள்ளது.
 • மிஹ்ராப் பிரார்த்தனை அறையாக பயன்படுத்தப்படுகிறது.
 • அதன் பிரார்த்தனை அறையை அழகுபடுத்த பளிங்கு மற்றும் அரேபிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • முன்பு மேற்கூரை இருந்தது, ஆனால் தற்போது இடிந்து விழுந்துள்ளது.
 • பிரதான நுழைவாயில் அரேபிய மற்றும் வடிவியல் ஓவியங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது.

Balban’s Tomb | பால்பனின் கல்லறை

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_130.1
Balban’s Tomb
 • கியாசுத்தீன் பால்பானின் கல்லறை, இந்தியாவின் புது தில்லி மெக்ராலியில் அமைந்துள்ள ஒரு கட்டிடமாகும்.
 • கி.பி 1287 இல் இடிபாடுகளில் கட்டப்பட்ட இந்த கல்லறை இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டிடமாகும். ஏனெனில் இங்குதான் இந்தியாவில் முதல் இஸ்லாமிய பாணியிலான கட்டிடக்கலைத் தோன்றியது.
 • கி.பி 1311 இல் அலாய் தர்வாசா என்ற பகுதிக்கு அருகிலுள்ள குதுப் மினார் வளாகத்தில் இது கட்டப்பட்டது.
 • இது இந்தியாவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால குவிமாடமாகும்.
  கியாசுத்தீன் பல்பான் இறந்த பின்னர் கட்டப்பட்ட இந்தக் கல்லறை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

Also Read : TNPSC TAMILNADU GENERAL KNOWLEDGE Q&A PART-19 PDF 

Decline of Slave Dynasty | அடிமை வம்சத்தின் வீழ்ச்சி

அடிமை வம்சத்தின் பத்தாவது மற்றும் கடைசி சுல்தான் முயிஸ்-உத்-தின் முஹம்மது கைகாபாத் ஆவார். அவர் சுல்தான் என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தார் மற்றும் 1287 முதல் 1290 வரை ஆட்சி செய்தார். அந்த நேரத்தில் அவர் இன்னும் இளமையாக இருந்ததால், அவர் அனைத்து அரசு சார்ந்த விவகாரங்களையும் புறக்கணித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், பின்னர் 1290 இல் ஒரு கில்ஜி தலைவரால் கொல்லப்பட்டார். அவரது மூன்று வயது மகன் கயூமர்ஸ், அவருக்குப் பின் வந்தார், ஆனால் அடிமை வம்சம் கல்ஜிகளின் எழுச்சியுடன் முடிவுக்கு வந்தது.

 

*****************************************************

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Read More:

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021

Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021

Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

Coupon code- WIN75-75% OFFER + Double Validity

Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்_140.1
TAMIL NADU MEGAPACK

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group