Tamil govt jobs   »   Latest Post   »   சிற்றிலக்கியம், காலம், சிறப்புகள், வகைகள்

சிற்றிலக்கியம், காலம், சிறப்புகள், வகைகள்

சிற்றிலக்கியம்

சிற்றிலக்கியம் என்பது அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமையும். அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. சிற்றிலக்கியம் என்ற வகைமை, அதனுள் அடங்கும் பல்வேறு சிற்றிலக்கியங்கள், அவற்றின் உள்ளடக்கம், அமைப்பு, அவற்றின் சிறப்புகள் ஆகியவற்றை நாம் இந்தக் கட்டுரையில் காணலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

சிற்றிலக்கியம் ஒரு கண்ணோட்டம்

  • தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் முதலியவற்றைச் சிற்றிலக்கியம் என்று கூறுவர்.
  • பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • சிற்றிலக்கியம் என்பது , தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் கூறும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கில், ஏதேனும் ஒன்றைக் கூறும்.
  • பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, உலா இலக்கியம் என்பது தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
  • அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம் ஆகும். இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் ஆகும்.
  • சிற்றிலக்கியங்களை முதலில் பிரபந்தங்கள் என்று வழங்கினர். பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு வடிவமைக்கப்பட்டது என்பது பொருள். இது அனைத்து இலக்கியங்களுக்கும் பொதுவானதே, ஆகவே காலப்போக்கில் சிற்றிலக்கியம் என்ற சொல்லே இவ்வகை இலக்கியங்களைக் குறிக்க நிலைபெற்றது.

சிற்றிலக்கிய காலம்

  • நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்று அழைக்கலாம்.
  • சங்க காலத்திலேயே சிற்றிலக்கியம் தோன்றிவிட்டது எனலாம். சங்க இலக்கியத்தை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பிரிப்பர். இவற்றுள், பத்துப்பாட்டில் 10 நூல்கள் உள்ளன. அவற்றுள் 5 நூல்கள் ஆற்றுப்படை என்ற சிற்றிலக்கிய வகை ஆகும். திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்பவையாகும்.
  • சங்கம் மருவிய காலத்துத் தொகையான பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியவை சிற்றிலக்கியங்களே ஆகும்.
  • பக்தி இலக்கியக் காலத்தில் நாயன்மார்கள் இயற்றிய திருமுறைகள், பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றுள், பல்வேறு சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. காரைக்கால் அம்மையார் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகம், மாணிக்கவாசகர் பாடிய திருத்தசாங்கம், திருக்கோவையார், திருமங்கை ஆழ்வார் பாடிய திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் போன்றவை சிற்றிலக்கியங்கள் ஆகும்.
  • பின்பு பல்வேறு காலங்களில் பல்வேறு சிற்றிலக்கிய நூல்கள் இன்று வரையிலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. எனினும், சிற்றிலக்கிய வகைகள் மேலோங்கி நின்ற காலத்தின் அடிப்படையில், சிற்றிலக்கியக் காலம் என்று அழைத்தனர். கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கிய வகைகள் மேலோங்கி நின்றன. இக்காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கலாம்.

Also Read: SANGAM LITERATURE | சங்க இலக்கியம் | TNPSC Study material

சிற்றிலக்கியத்தின் சிறப்புகள்

  • சிற்றிலக்கியங்கள் மூலம் ஓரளவு தமிழ்ப் பண்பாட்டினை, தமிழக வரலாற்றினை அறிய முடிகிறது.
  • கற்பனை ஆற்றலைப் பெருக்குவதில் சிற்றிலக்கியங்கள் பேருதவி புரிகின்றன.
  • பள்ளு போன்ற சிற்றிலக்கியங்கள் மூலமாக அக்கால மக்களின் சமூக வாழ்வியலை நம்மால் அறிய முடிகிறது.
  • பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் அழகியல் தன்மையோடு காணப்படுகின்றன.
  • தெய்வங்கள் மீது அமைந்த சிற்றிலக்கியங்கள் மூலம் ஊர் வரலாறு, புராண கதைகள், மக்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அறியலாம்.
  • மொத்தத்தில் சிற்றிலக்கியங்கள், அளவிலே சிறியதாக இருந்தாலும், தமிழ் வளர்ச்சிக்கு பேருதவி செய்பவையாக அமைந்துள்ளன.

சிற்றிலக்கிய வகைகள்

சிற்றிலக்கியம் என்பதனுள் 96 வகையான இலக்கியங்கள் காணப்படுகின்றன என்று பொதுவாகக் கூறும் வழக்கம் உள்ளது. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல் என்ற பாட்டியல் நூல் கூறுகின்றது.
வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியும் 96 இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகின்றது.

இதனால், சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறப்படும் பொதுவான மரபு இருந்துள்ளது. தமிழ்மொழியில் உள்ள பல்வேறு வகையான சிற்றிலக்கியங்களை, பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

சிற்றிலக்கிய வகைகள்

அகப்பொருட்கோவை ஒலியந்தாதி தும்பைமாலை பெருங்காப்பியம்
அங்கமாலை கடைநிலை துயிலெடை நிலை பெருமகிழ்ச்சிமாலை
அட்டமங்கலம் கண்படைநிலை தூது பெருமங்கலம்
அரசன்விருத்தம் கலம்பகம் தொகைநிலைச்செய்யுள் போர்க்கெழுவஞ்சி
அலங்காரபஞ்சகம் காஞ்சிமாலை நயனப்பத்து மங்கலவள்ளை
அனுராகமாலை காப்புமாலை நவமணிமாலை மணிமாலை
ஆற்றுப்படை குழமகன் நாமமாலை முதுகாஞ்சி
இணைமணி மாலை குறத்திப்பாட்டு நாழிகைவெண்பா மும்மணிக்கோவை
இயன்மொழி வாழ்த்து கேசாதிபாதம் நான்மணிமாலை மும்மணிமாலை
இரட்டைமணிமாலை கைக்கிளை நானாற்பது முலைப்பத்து
இருபா இருபது கையறுநிலை நூற்றந்தாதி மெய்க்கீர்த்திமாலை
உலா சதகம் நொச்சிமாலை வசந்தமாலை
பவனிக்காதல் சாதகம் பதிகம் வரலாற்று வஞ்சி
உலாமடல் சிறுகாப்பியம் பதிற்றந்தாதி வருக்கக் கோவை
உழத்திப்பாட்டு சின்னப்பூ பரணி வருக்கமாலை
உழிஞைமாலை செருக்களவஞ்சி பல்சந்தமாலை வளமடல்
உற்பவமாலை செவியறிவுறூஉ பன்மணிமாலை வாகைமாலை
ஊசல் தசாங்கத்தயல் பாதாதிகேசம் வாதோரணமஞ்சரி
ஊர் நேரிசை தசாங்கப்பத்து பிள்ளைக்கவி வாயுறைவாழ்த்து
ஊர்வெண்பா தண்டகமாலை புகழ்ச்சி மாலை விருத்தவிலக்கணம்
ஊரின்னிசை தாண்டகம் புறநிலை விளக்குநிலை
எண்செய்யுள் தாரகைமாலை புறநிலைவாழ்த்து வீரவெட்சிமாலை
ஐந்திணைச் செய்யுள், தானைமாலை பெயர் நேரிசை வெட்சிக்கரந்தைமஞ்சரி
ஒருபா ஒருபது எழுகூற்றிருக்கை பெயரின்னிசை வேனில் மாலை

பொருள் அடிப்படை

இலக்கியத்தில் உள்ளடக்கமாக உள்ள அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் சிற்றிலக்கியங்களை அகப்பொருள் சிற்றிலக்கியங்கள், புறப்பொருள் சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தலாம். தூது, கோவை முதலியன அகப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கும், பிள்ளைத் தமிழ், பரணி போன்றவை புறப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கும் சான்றுகள் ஆகும்.

நிகழ்வுகள், செயல்கள் அடிப்படை

அகம், புறம் என்னும் இவ்விருவகைப் பொருள்களிலும் உள்ள துறைகளைத் (தனித்தனி நிகழ்வுகள் அல்ல செயல்கள்) தனித்தனியே கொண்டு சிற்றிலக்கியங்கள் அமைவது உண்டு. பாட்டுடைத் தலைவனிடம் தூது விடுவதாகப் பாடுபொருள் அமைவது தூது இலக்கியம் எனப்படும். பாட்டுடைத் தலைவன் உலா வருதலாகப் பாடுபொருள் அமைவது உலா இலக்கியம் எனப்படும். பாட்டுடைத் தலைவனைத் தூக்கத்திலிருந்து எழவேண்டுவதாகப் பாடுபொருள் அமைவது பள்ளி எழுச்சி இலக்கியம் எனப்படும். பெண்கள் ஆடும் ஊசல் விளையாட்டில் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடுவது ஊசல் இலக்கியம் எனப்படும்.

பிற கருத்துகள் அடிப்படை

பாடு பொருளாகப் பக்திக் கருத்துகளையும், தத்துவக் கருத்துகளையும், நீதிக் கருத்துகளையும் கொண்டு அமையும் சிற்றிலக்கியங்கள் உண்டு. பரணி இலக்கியத்துள் ஒன்றான மோகவதைப் பரணி வழக்கமான பரணி இலக்கியம்போல் அல்லாமல் தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியிருப்பது.

எண்ணிக்கை அடிப்படை

  • நூலில் இடம்பெறும் பாடல் எண்ணிக்கையின் அடிப்படையிலும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.
  • ஐந்து பாடல்களைக் கொண்ட இலக்கியம் பஞ்சகம் என்றும், பத்துப் பாடல்களைக் கொண்ட இலக்கியம் பத்து, பதிகம் என்றும், நூறு பாடல்களைக் கொண்ட இலக்கியம் சதகம் என்றும் அழைக்கப்படுவதை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

புகழ்தல் அடிப்படை

  • உடல் உறுப்புகளைப் புகழ்ந்து பாடுதலை அடிப்படையாகக் கொண்டும், மக்களைப் புகழ்ந்து பாடுதலை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்கள் தோன்றின.

உறுப்புகளைப் புகழ்தல்

  • உடல் உறுப்புகளைப் புகழ்ந்து பாடுதல் என்ற அடிப்படையிலும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.
  • உறுப்புகளைப் பொதுவாகப் புகழ்ந்து பாடும் இலக்கியம் அங்க மாலை ஆகும். தலை முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் கேசாதி பாதம் ஆகும். பாதம் முதல் தலை வரை உள்ள உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பாதாதி கேசம் ஆகும். பெண்களின் கண்களைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் நயனப் பத்து எனப்படும்.
  • அரசனின் குடை, கொடி, முரசு, தேர், யானை, படை, குதிரை, செங்கோல், நாடு, நகரம் முதலிய பத்து உறுப்புகளைப் பாடும் அடிப்படையில் எழுந்த சிற்றிலக்கியங்களை இந்த வகையில் அடக்கலாம். சான்றுகளாகத் தசாங்கம், தசாங்கப் பத்து, தசாங்கத்தயல், சின்னப்பூ முதலிய இலக்கியங்களைக் கூறலாம்.

மக்களைப் புகழ்தல்

  • ஆடவர் அல்லது பெண்களைப் புகழும் நோக்கில் இயற்றப்பட்ட சிற்றிலக்கியங்களையும் தனியாக வகைப்படுத்தலாம்.
  • ஆடவர்களைப் புகழும் நோக்கில் இயற்றப்பட்டது நாம மாலை என்ற சிற்றிலக்கிய வகையாகும். பெண்களைப் புகழும் நோக்கில் இயற்றப்பட்டவை புகழ்ச்சி மாலை, தாரகை மாலை என்ற இலக்கிய வகைகள் ஆகும்.

யாப்பு அடிப்படை

  • நூலை இயற்றுவதற்குப் பயன்பட்ட யாப்பின் அடிப்படையிலும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம். அந்தாதி, வெண்பா, இன்னிசை, நேரிசை, அகவல் முதலான இலக்கிய வகைகளை இவ்வகையுள் அடக்கலாம்.

சொல் முடிபு அடிப்படை

  • நூற்பெயரின் இறுதிச் சொல்லை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.
  • வேனில் மாலை, காப்பு மாலை முதலியவற்றை மாலை இலக்கிய வகை என்று கூறுவதைச் சான்றாகக் காட்டலாம்.

நாட்டுப்புற இயல் அடிப்படை

  • நாட்டுப்புற விளையாட்டுகளையும், நாட்டுப்புற இலக்கியங்களையும் அடிப்படையாகக் கொண்டு சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம்.
  • ஊசல், அம்மானை போன்ற இலக்கியங்கள் நாட்டுப்புற விளையாட்டு அடிப்படையிலான சிற்றிலக்கியங்கள் என்றும், பள்ளு, குறவஞ்சி முதலியன நாட்டுப்புற இலக்கிய அடிப்படையிலான சிற்றிலக்கியங்கள் என்றும் வகைப்படுத்தலாம்.

இசை அடிப்படை

  • இசை அடிப்படையிலும், இசைநாடகம் என்ற அடிப்படையிலும் சிற்றிலக்கியங்கள் வகைப்படுத்தப்படும்.
  • தெம்மாங்கு, கும்மி, சிந்து, கீர்த்தனை போன்ற இலக்கியங்கள் இசை அடிப்படையில் அமைந்தவை ஆகும்.
  • இசையுடன் நடித்துக் காட்டுவதற்கு ஏற்ற வகையில் இயற்றப்பட்ட இலக்கியங்களாகப் பள்ளு, குறவஞ்சி முதலியன காணப்படுகின்றன.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

 Home page Adda 247 Tamil
Latest Notification TNUSRB Recruitment 2023
Official Website Adda247

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil