எட்டுத்தொகை : எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியத்தில் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. எட்டுத்தொகை பற்றி இதில் காணலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
எட்டுத்தொகை முன்னோட்டம்
அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.
எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.
எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”
இவற்றுள்,
அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது: பரிபாடல்.
அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.
எட்டுத்தொகை தொகுப்பு
பரிபாடலில் எட்டு பாடல்கள், அகம் பற்றியன. இவை, கடவுள் பற்றிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டவை. புறநானுற்றில், வஞ்சிப் பாடல்கள் சில உள்ளன. இடத்திற்கேற்ப, தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனர். புறத்திணைகளுள் வாழ்க்கைக்கு என்றும் இன்றியமையாத அறங்களையும், ஒழுக்கங்களையும் வலியுறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப் பாடியுள்ளனர். கிடைத்த பாடல்களில், குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நூறு என ஒரு வகையாகத் தொகை கொண்டனர். ஐங்குறுநூற்றுள் பாலைக்கும் ஒரு நூறு கொண்டனர். பிற்காலத்தார், நான்கு திணைப் பாடல்களை ஐந்திணைக்கும் பலவகையாகப் பிரித்திருக்கக்கூடும். பாடல்களின் அடியளவுகளைக் கொண்டு பல தொகை நூல்களைத் தொகுத்துள்ளனர்.
Read Also : கம்பராமாயணம் | TNPSC Group1 and 2/2A Exams
3அடிச் சிறுமையும் 6அடிப் பெருமையுமுடைய பாடல்களை ஐங்குறுநூறு என்றனர். ஐந்து புலவர்கள் நூறுநூறாகப் பாடிய தனித்தன்மையையும் உடையது இத்தொகை நூல். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையென்ற சேரன் ஆதரவால், கூடலூர்க்கிழார் இதனைத் தொகுத்தார்.
4-8 அடியெல்லையினையுடைய பாடல்களைக் குறுந்தொகை ஆக்கினர். 9-12 அடிப்பாடல்கள் நற்றிணையாக அமைந்தன. 13-31 அடிப்பாடல்கள் நெடுந்தொகையாய் அகநானூறு ஆயின.
பொதுவாக எட்டுத்தொகை நூல்களில், பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும், வரையாது வழங்கும் வள்ளன்மைப் பண்பையும், மறக்குடி மகளிரின் மாண்பினையும், போர் தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின் இயல்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும், புராணச் செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் அறியலாம்.
கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றிலும், அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன.தம்மைப் புரந்த வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும் குறிப்புகளே இவை. கடைச்சங்கத் தொடக்கத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் இலங்கியுள்ளனர். அக்காலத்தே ஆண்ட சேர, சோழ, பாண்டியர், சிற்றரசர்கள், குறுநில மன்னர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள், புறநானூற்றில் மிகுதியாகவும், அகநூல்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன.
அகத்திற்கு நானூறு என்பதற்கேற்ப, புறத்திற்கும் நானூறு பாடல்களைத் தொகுத்தனர். புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறத்தைப் பற்றியன. மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும், திணை நூல்களின் பாடல்களை அறம், பொருள் ,இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப் பெற்றுள்ளன.
READ MORE: தமிழ் இலக்கணம்: சந்திப்பிழை அறிதல்
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. இஃது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் ‘நல்’ என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் “பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி” ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் 7 அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறுந்தொகை
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. இந்நூல் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுகிறது. இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE: மௌரிய கலை மற்றும் கட்டிடக்கலை
இந்த நூலின் முதல் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத அடுத்த 20 பாடல்களுக்கு ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
READ MORE: மகாபலிபுரத்தில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை பகுதி-1
பதிற்றுப்பத்து
பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை ஆயினும் ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாற்றையே நமக்குக் கிடைக்கப்பெற்ற பதிற்றுப்பத்து 80 பாடல்கள் வாயிலாகப் பெறமுடிகிறது.
READ MORE: மகாபலிபுரத்தில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை பகுதி-2
பரிபாடல்
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)
ஆனால் இன்று, திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன.
கலித்தொகை
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
கலித்தொகை நூலை முதன்முதலில் சி. வை. தாமோதரம்பிள்ளை 1887-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக “நல்லந்துவனார் கலித்தொகை” என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார்.
Also Read : டெல்லி சுல்தானியம் | The Delhi Sultanate For TNPSC | RRB NTPC
அகநானூறு
அகநானூறு எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, ‘நெடுந்தொகை’ (நெடுமை+தொகை.நெடிய அல்லது நீண்ட பாடல்களின் தொகுப்பு) என்றும் கூறுவர்.
அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை ‘நெடுந்தொகை அகவல்’ என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான்.
புறநானூறு
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும்.புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளைப் புறநானூறு வழி அறியலாம். புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.
READ MORE: Slave Dynasty for TNPSC | அடிமை வம்சம்
எட்டுத்தொகை முடிவுரை
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
*****************************************************
Coupon code- FEST75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group